ஆகாஷ் டெலிசன் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் நகலை அவரது குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மனு அளித்தனர்.

கடந்த மார்ச் 5-ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் டெலிசன், மார்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தார். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை எனக் குற்றம்சாட்டி, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 102 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிபிசிஐடி (CB-CID) விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அதன் நகல் இதுவரை ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் அல்லது குடும்பத்தினரிடம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் வழக்கு மாற்றம் தொடர்பாக உள்ள சட்டப்பூர்வமான சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் ஆகாஷ் டெலிசனின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டு, “நீதி வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தி தங்களது கோரிக்கைகளையும் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.








