
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 169-வது அவதார திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இங்கு அமைந்துள்ள கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் முதலாவது ஜீவ ஒடுக்கம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சுவாமிகளின் அவதார திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அந்த வகையில், 169-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிகளுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கருப்பனேந்தல் மட நிர்வாகிகள், கட்டிக்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர். இரவில் கட்டிக்குளம் கிராமத்தில் சுவாமி வீதி உலாவும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மட நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தகவல் தொடர்பு பணிகளை கா. சேகர் மற்றும் எம். தண்டபாணி ஒருங்கிணைத்தனர்.












